சென்னை: சென்னையில் நவம்பர் 24 முதல் செல்லப்பிராணி நாய் அல்லது பூனை வைத்திருப்பவர்கள் கட்டாயமாக “செல்லப்பிராணி உரிமம்” (Pet Licence) பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்கான தீர்மானம் மேயர் ப்ரியா ராஜன் தலைமையிலான மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய விதி நகரில் செல்லப்பிராணி பராமரிப்பை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பும், சுகாதாரச் சீர்குலைவும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

செல்லப்பிராணி உரிமம் இல்லாமல் நாயை சாலையில் அழைத்துச் செல்லும் போது பிடிபட்டால் ₹5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் கயிறு இல்லாமல் நாயை கூட்டிசென்றால் ₹500 அபராதம், ஒரே நேரத்தில் பல நாய்களை அழைத்துச் சென்றால் அதற்கும் அபராதம் விதிக்கப்படும்.
மாநகராட்சியின் சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று செல்லப்பிராணி விவரங்களைச் சரிபார்ப்பார்கள். பிரிவுவாரியாக சுகாதார ஆய்வாளர்கள் அபராதம் வசூலிக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர். இதன் மூலம் நகரத்தில் பொது இடங்களில் நாய்கள் மூலம் ஏற்படும் தொந்தரவு, சுகாதார பிரச்சனைகள் ஆகியவை குறையும் என்று நம்பப்படுகிறது.
2023 ஆகஸ்டில் மாநகராட்சி தொடங்கிய ஆன்லைன் லைசன்ஸ் முறை தற்போது முழுமையாக செயல்படுகிறது. https://petservice.gccservices.in/department/login என்ற இணையதளத்தில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யலாம்.
Also Read: தமிழ்நாட்டில் வெட்டினரி மருத்துவராக ஆவது எப்படி? முழுமையான வழிகாட்டி
பதிவு செய்யும்போது செல்லப்பிராணியின் புகைப்படம், உரிமையாளரின் தகவல்கள், ரேபிஸ் தடுப்பூசி சான்றிதழ், மற்றும் மைக்ரோசிப் விவரங்கள் ஆகியவை பதிவேற்றப்பட வேண்டும். இந்த விவரங்களை பதிவு செய்யப்பட்ட வெட்டினரி மருத்துவர்கள் மட்டுமே பதிவேற்ற முடியும்.
அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு மண்டல வெட்டினரி அதிகாரி உரிமத்தை அங்கீகரிப்பார். ஒருமுறை வழங்கப்பட்ட உரிமம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். இதுவரை சுமார் 10,000 செல்லப்பிராணிகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
புதிய விதிகளின் கீழ், மாநகராட்சி தனது கிளினிக்குகளில் மைக்ரோசிப் பொருத்தும் சேவையை இலவசமாக வழங்குகிறது. மேலும், தனியார் வெட்டினரி மருத்துவர்களுக்கும் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்போது மைக்ரோசிப் பொருத்தல் உரிமம் பெறுவதற்கான கட்டாய நிபந்தனையாகும்.
மாநகராட்சி ஒரு மாத அவகாசத்தை வழங்கியுள்ளது. நவம்பர் 24க்கு முன் உரிமம் பெற்றவர்கள் அபராதத்திலிருந்து விலக்கு பெறுவார்கள். இந்த தீர்மானம் “Urban Local Bodies Act, 1998 Rules 2023” சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செல்லப்பிராணி உரிமையாளர்கள் பல புதிய பொறுப்புகளும் ஏற்க வேண்டும். அவர்களின் நாய்கள் பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதவாறு பார்த்துக்கொள்ளுதல், தடுப்பூசி மற்றும் ஸ்டெரிலைசேஷன் செய்வது, மற்றும் சாலைகளில் மலம் கழிக்க விடாதிருத்தல் சட்ட ரீதியாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: “இந்த நடவடிக்கை நகரில் நாய் சார்ந்த புகார்களை குறைக்கும்; சாலைகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம் பராமரிக்க இது முக்கியமான முன்னேற்றம். நாய் வளர்ப்பு என்பது ஒரு பொறுப்பு — அதைச் சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வழி இதுதான்,” என்றனர்.
More Articles You May Like
